கோடைகாலத்தில் மக்கள் இருக்கும் இடத்துக்கே சென்று ஐஸ்கிரீம் வகைகளை தள்ளுவண்டியில் விற்பனை செய்ய ஆவின் திட்டமிட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக பால்மட்டுமன்றி, 225-க்கும் மேற்பட்ட பால்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில், மோர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், நெய், இனிப்பு வகைகள் ஆகியவற்றை எல்லா தரப்பினரும் விரும்புகின்றனர். இந்நிலையில், வரும் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம், மோர், லஸ்ஸி ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய ஆலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் ந.சுப்பையன் கூறுகையில், தள்ளு வண்டிகள் மூலமாக ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக விற்பனையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மக்கள் இருக்கும் இடத்துக்கு நேரடியாக சென்று அவர்கள் விரும்பும் ஆவின் பொருள்களை வழங்க திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக, சென்னை மற்றும் புறநகரைச் சேர்ந்த 100 புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம் என்று கூறினார்.














