தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் சேர ரூ.15,000 சம்பள வரம்பை நீக்கி உள்ள உச்சநீதிமன்றம், ஓய்வூதிய திட்டத்தில் கடந்த 2014ல் கொண்டு வரப்பட்ட திருத்தம் செல்லும் என உத்தரவிட்டுள்ளது.
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதியாக 12 சதவீதமும், நிறுவனத்தின் சார்பில் 12 சதவீதமும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும். இதில், இபிஎஸ் எனும் ஓய்வூதிய திட்டமும் உள்ளது. ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்த ஓய்வூதிய திட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு ஒன்றிய அரசு திருத்தம் செய்தது. அதன்படி, ஓய்வூதியத்துக்கான அதிகபட்ச சம்பளம் வரம்பு ரூ.6,500ல் இருந்து ரூ.15,000 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால், ரூ.15,000க்கு கீழ் உள்ள ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இந்த திருத்தத்தை கேரளா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்கள் ரத்து செய்தன. இதை எதிர்த்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தொழிலாளர் ஓய்வூதிய விதிகள் திருத்தம் சட்டப்படி செல்லுபடியாகும். ஆனால், அதில் ரூ.15,000 சம்பள வரம்பு நீக்கப்படுகிறது. ஓய்வூதிய திட்டத்தில் சேராத தகுதி வாய்ந்த பணியாளர்கள் இத்திட்டத்தில் சேர 6 மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.