மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாத, கோழிப் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ஆரியகவுண்டம்பட்டியை சேர்ந்த பிரபா என்பவர் 2020-ல் பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், சரஸ்வதி வேலப்பன் என்பவர் நடத்தி வரும் கோழிப் பண்ணையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாலும், கழிவுகளாலும், அப்பகுதியில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோழிப் பண்ணைக்காக அதிக அளவு நிலத்தடி நீரை உறிஞ்சுவதால், அப்பகுதியில் நீர்மட்டம் குறைந்துள்ளது. எனவே, கோழிப் பண்ணையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இதுகுறித்து, பசுமை தீர்ப்பாய நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால்
ஆகியோர் கூறுகையில், மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறாமலும், அதன் உத்தரவுகளை மீறும் வகையிலும் கோழிப் பண்ணை நடத்துவது சட்டத்தை மீறுவதாகும். சரஸ்வதி வேலப்பன் தான் நடத்தும் கோழிப் பண்ணைக்கு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறும் வரை கோழிப் பண்ணையை இயக்கக் கூடாது.
மேலும், பண்ணையை சுற்றி மரங்களை நட்டு, பசுமை பரப்பை உருவாக்க வேண்டும் என கூட்டுக்குழு பரிந்துரைத்திருந்தது. ஆனால் அதிக அளவில் மரங்கள் இருந்தால் கோழிகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும் என பண்ணை உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆறு மாதங்களுக்குள் வழங்க வேண்டும்.
அதிக அளவு நிலத்தடி நீரை உறிஞ்சும் மாவட்டமாக நாமக்கல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கோழிப் பண்ணைக்காக கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவை கணக்கிட வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை பெறாத கோழிப் பண்ணைகள் மீது மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.