உலக பணக்காரர்கள் பட்டியலில் 33-வது இடத்துக்கு அதானி சரிந்துள்ளார்.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்னும் நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த மாதம் 25-ந் தேதி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்துக்குச் சொந்தமான 7 நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்தன. ஆய்வறிக்கை வெளியீட்டுக்கு பின், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ. 12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்துள்ளது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 120 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 3-ம் இடத்தில் அதானி இருந்து வந்தார். ஆனால், சுமார் 80 பில்லியன் டாலர் சொத்துகளை இழந்து 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 33-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார். முகேஷ் அம்பானி 80 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 10- வது இடத்தில் உள்ளார்.