கடந்த வார பங்குச் சந்தையில், கடும் சரிவை பதிவு செய்த அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்கள், இந்த வாரம் ஏறுமுகத்தை பதிவு செய்து வருகின்றன. இன்றைய வர்த்தக நாளின் காலை நிலவரப்படி, அதானி குழுமத்தை சேர்ந்த 8 நிறுவனங்கள் ஏற்றத்தை பதிவு செய்துள்ளன. அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனங்கள் மட்டும் சரிவை பதிவு செய்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 13.07% உயர்ந்து, 2038 ரூபாய்க்கு வர்த்தகமானது. மேலும், இதன் சந்தை மதிப்பு 2.32 லட்சம் கோடியாக பதிவானது. அதே வேளையில், அதானி போர்ட்ஸ் பங்குகள் 7.24% உயர்ந்து, 593.35 ரூபாய்க்கு வர்த்தகமானது. இதன் சந்தை மதிப்பு 1.28 லட்சம் கோடியாக பதிவானது. அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்குகள் 5% உயர்ந்து 1314.25 ரூபாய்க்கும், அதானி பவர் பங்குகள் 4.99% உயர்ந்து, 182 ரூபாய்க்கும், அதானி வில்மர் பங்குகள் 4.99% உயர்ந்து 419.35 ரூபாய்க்கும் வர்த்தகமாயின. அதானி குழுமத்தில் அண்மையில் இணைந்த என்டிடிவி பங்குகள் 3.94% உயர்ந்து 225.5 ரூபாய்க்கும், அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் 1.15% உயர்ந்து 388.10 ரூபாய்க்கும் வர்த்தகமாயின.