அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தால் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு வருடாந்திர அடிப்படையில் 9.5% உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், அதானி போர்ட்ஸ், 32 மில்லியன் டன் அளவில் சரக்குகளை கையாண்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக இதுவரை 339 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு, முதல் முறையாக 30 மில்லியன் டன் அளவை தாண்டி மார்ச் மாதம் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக நிறுவனமாக அதானி போர்ட்ஸ் உள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமம் கடும் சரிவை சந்தித்த போதும், அதானி போர்ட்ஸ் வலுவான நிலையில் உள்ளதை, அதன் சரக்கு கையாளல் குறித்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகமாகவும், அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குஜராத் முந்த்ரா துறைமுகம் 155 மில்லியன் டன் சரக்குகளை கடந்த வருடம் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், பல புதிய துறைமுகங்களை கையகப்படுத்தி, அதானி போர்ட்ஸ் விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எனவே, அதானி போர்ட்ஸ் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதாக சொல்லப்பட்டுள்ளது.