கொரோனா மருந்துகள் உள்ளிட்ட அனைத்து மருந்துகளையும் போதுமான அளவு கையிருப்பு வைப்பதை உறுதி செய்யுமாறு மருந்து நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில் நமது நாட்டில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் மருந்து நிறுவனங்களுடன் மத்திய அரசு நேற்று ஆலோசனை நடத்தியது. அதில் தற்போதைய நிலைமை, கொரோனா தொற்று மேலாண்மை மருந்துகள் இருப்பு, மருந்து நிறுவனங்களின் உற்பத்தி திறன் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா ஆராய்ந்தார். கொரோனா தொற்றின்போது மருந்து நிறுவனங்களின் விலை மதிப்பிட முடியாத பங்களிப்பை அவர் பாராட்டினார்.
மேலும் மருந்துகள் உற்பத்தி, கொரோனா மேலாண்மைக்குரிய மருந்துகள் உள்பட அனைத்து மருந்துகளின் கையிருப்பை கவனித்து வர வேண்டும். போதுமான அளவுக்கு அவற்றை கையிருப்பில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.