தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களில் டெலி மெடிசின் மூலம் உயர்மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறுகையில், தொலை தொடர்பு சேவை இல்லாத கிராமங்களுக்கு அத்தகைய வசதியை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு கண்ணாடி இழை இணைய சேவை நிறுவனம் (டேன்ஃபிநெட்) தொடங்கப்பட்டது. அதன் சார்பில் மலைப் பகுதிகளிலும், மிகவும் பின்தங்கிய கிராமங்களிலும் இணையசேவை வழங்கப்பட்டு வருகிறது. அதை பயன்படுத்தி, அப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மருத்துவசேவைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொலைநிலை சாதனத்தை டேன்ஃபிநெட் நிறுவனம் வழங்கியுள்ளது.
முதல்கட்டமாக, அதை பரிசோதனை முறையில் செயல்படுத்தி ஆய்வு செய்து வருகிறோம். தடையின்றி இணைய சேவை கிடைக்கிறதா, தொலைநிலை முறையில் மருத்துவர்களை நோயாளிகள் எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறதா, அதன்மூலம் மருத்துவ சிகிச்சைகளை வழங்க முடிகிறதா என்று ஆய்வு நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.