மிஷன் சக்தி திட்ட செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஒடிசா சென்றுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். ஒடிசா மாநிலத்தில் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்தப்படும் மிஷன் சக்தி என்ற திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், இத்திட்டம் எவ்வாறு மாபெரும் இயக்கமாக உருவெடுத்து வருகிறது என்பது குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்தாலோசித்தார்.
மிஷன் சக்தி திட்டத்தினை ஒடிசா மாநிலத்தின் அனைத்து துறைகளும் எவ்வாறு இணைந்து செயல்படுத்துகின்றன என்பதை ஒடிசா மாநில மிஷன் சக்தி இயக்குநர் சுஜாதா விளக்கினார். அப்போது இத்திட்டம் குறித்து அனைத்து அலுவலர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்.