தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில், அண்மையில், பெண்களுக்கு பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு மறுக்கப்பட்டது. இந்நிலையில், நேரலையில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில், பேராசிரியர் ஒருவர் தனது பட்டப்படிப்பு சான்றிதழை கிழித்தெறிந்தது, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
காபூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசி வந்தார். அவர், "கல்விக்கு இடம் இல்லாத நாட்டில் இந்த சான்றிதழ்கள் எனக்குத் தேவையில்லை. எனது தாய்க்கும் சகோதரிக்கும் கல்வி இல்லை என்கின்ற நாட்டின் கல்வி முறையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை" என்று கூறி தனது டிப்ளமோ பட்டப்படிப்பு சான்றிதழை கிழித்தெறிந்தார். ஆப்கானிஸ்தானில், பெண்களுக்கு எதிரான தாலிபன்களின் அடக்குமுறைகளை எதிர்த்து போராட்டங்கள் தொடங்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.