அகல ரயில்பாதை பணிகள் முடிந்த நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு போடிக்கு இன்று முதல் ரயில் சேவை தொடங்குகிறது.
மதுரை - போடி வழித்தடத்தை அகல ரயில்பாதையாக மாற்றுவதற்காக 2010-ம் ஆண்டு டிசம்பருடன் மீட்டர்கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு மே 27-ம் தேதி முதல் மதுரையில் இருந்து தேனி வரை தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் போடி வரை இந்த ரயில் நீட்டிக்கப்பட உள்ளது. இதற்கான அனைத்து பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் போடிக்கு ரயில் சேவை தொடங்குகிறது. மதுரையில் இருந்து தினசரி ரயில் (06701) காலை 8.20-க்கு புறப்பட்டு 10.30 மணிக்குப் போடியை வந்தடைகிறது. மீண்டும் மாலை 5.50-க்கு புறப்படும் இந்த ரயில் (06702) இரவு 7.50 மணிக்கு மதுரையைச் சென்றடைகிறது. இந்த ரயில் இயக்கத்துக்கான தொடக்க விழா போடி ரயில் நிலையத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.