அரசு கல்லூரிகளில் பணிபுரியும் 955 பேராசிரியர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு, பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொறியியல் கலந்தாய்வு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அரசு கல்லூரிகளில் பணியாற்றி வருகின்ற உதவி பேராசிரியர்கள் பணியை வரைமுறை படுத்த வேண்டும் என்பதற்காக, கடந்த 2012-ம் ஆண்டு பணிக்கு நியமிக்கப்பட்ட 955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அப்போதே பணி நிரந்தரம் செய்வோம் என்று கடந்த அ.தி.மு.க. ஆட்சி அறிவித்தது. ஆனால் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாத காரணத்தினால் இன்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகங்களின் 41 உறுப்பு கல்லூரிகளை ரூ.152 கோடி செலவில் அரசே ஏற்று நடத்தும் என்றும் முந்தைய அரசு கூறியது. 41 கல்லூரிகளுக்கு முந்தைய ஆட்சியாளர்கள் நிதி எதுவும் ஒதுக்கவில்லை. எனவே 41 கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 41 கல்லூரிகள் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளதால் அங்கு பணியாற்றிய பேராசிரியர்களும் பயனடைவர் என்றார்.
மேலும், பொறியியல் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 14,524 பேரில் 10,351 மாணவர்கள் கலந்து கொண்டனர். 6,009 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்று அவர் கூறினார்.