சந்திராயன் 3 வெற்றியைத் தொடர்ந்து உலக நாடுகளை திரும்பி பார்க்கச் செய்யும் மற்றொரு ஆய்வுக்கு தயாராகி வருகிறது இந்தியா. இந்த முறை கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக 'மத்ஸ்யா 6000' என்ற நீர்மூழ்கி ஆய்வு வாகனத்தை சுமார் 6 கிலோ மீட்டர் ஆழத்திற்கு அனுப்பும் சமுத்ராயன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த வாகனத்தில் மூன்று ஆய்வாளர்கள் அனுப்பப்பட உள்ளனர்.
'மத்ஸ்யா 6000' வாகனத்தை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்துள்ளது. இப்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்காக, 6 கி.மீ. கடல் ஆழத்திற்கு 3 மனிதர்களை இந்த நீர்மூழ்கி வாகனத்தில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.