கொரோனா ஊரடங்கிற்கு பிறகு, டெபிட் கார்டுகளை விட கிரெடிட் கார்டுகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவுக்கு முன்னர், கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி நடத்தப்பட்ட பரிவர்த்தனை மதிப்பு 630414 கோடியாக இருந்தது. இது கடந்த 2021 ஆம் ஆண்டில், 1049065 கோடியாக அதிகரித்துள்ளது. அதே வேளையில், டெபிட் கார்டு மூலமான பண பரிவர்த்தனை மதிப்பு 661385 கோடியிலிருந்து 561450 கோடியாக சரிந்துள்ளது. குறிப்பாக, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத கிரெடிட் கார்டு பரிவர்த்தனையை, கடந்த 2022 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 92% உயர்வு காணப்படுகிறது. அதே வேளையில், டெபிட் கார்டு பரிவர்த்தனை 30% சரிவை பதிவு செய்துள்ளது.
அத்துடன், டெபிட் கார்டுகள் பணப்பரிவர்த்தனை முக்கியமாக ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கான முறையிலேயே பதிவாகியுள்ளது. மேலும், டெபிட் கார்டுகளை விட கிரெடிட் கார்டுகள் பயன்பாடு அதிகரித்ததற்கான காரணமாக வல்லுனர்கள் கூறுவதாவது: “வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைத்திருந்தால் மட்டுமே டெபிட் கார்டு பயன்படுத்த முடியும். ஆனால், கொரோனாவுக்கு பிறகு சேமிப்புகள் குறைந்துள்ளதால், பலரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அத்துடன், பல தனியார் வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு அதிக எண்ணிக்கையில் கிரெடிட் கார்டுகளை வழங்கியதுடன், பல்வேறு சலுகைகளையும் வழங்கின. இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.