தங்கள் நிறுவனத்தில் இருந்து விலகி காக்னிசென்ட் நிறுவனத்தில் இணைந்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை விப்ரோ நிறுவனம் எடுத்திருந்தது. அண்மையில், இது தொடர்பான செய்திகள் வெளியாகின. தற்போது, விப்ரோவை தொடர்ந்து, இன்போசிஸ் நிறுவனமும் காக்னிசென்ட் நிறுவனத்தில் இணைந்தவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள், காக்னிசென்ட் நிறுவனத்திற்கு எதிராக மோதலில் களமிறங்கியுள்ளன. தொழில் ரீதியான கண்ணியத்தை காக்னிசென்ட் மீறி உள்ளதாகவும், அதன்படி உயர்மட்ட அதிகாரிகளை வேறு நிறுவனங்களில் இருந்து பணியமர்த்தி உள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், விப்ரோ நிறுவனத்தைச் சேர்ந்த 2 உயர் அதிகாரிகளும், இன்போசிஸ் நிறுவனத்தை சேர்ந்த 4 உயர் அதிகாரிகளும் காக்னிசென்ட் நிறுவனத்தில் இணைந்துள்ளனர். காக்னிசென்ட் நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி ரவிக்குமார் இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களில் இருந்து கிட்டத்தட்ட 20 உயர் அதிகாரிகளை இதுவரை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. அதை எதிர்த்தே சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.