தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாளை அக்னிபான் ராக்கெட் விண்ணில் ஏவப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ஏவதளங்கள் மூலம் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி மற்றும் எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகின்றன. இங்கு சென்னையை சேர்ந்த விண்வெளி தொழில் முனைவோர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றொரு தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி முதன் முறையாக சென்னையை தளமாக கொண்ட ஐ.ஐ.டி மெட்ராஸ் இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட் அப் தயாரித்த ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்னிபான் ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாளை விண்ணில் ஏவப்படாது என்றும், தொழில்நுட்பக்கோளாறு சீரான பின்பு விண்ணில் ஏவப்படுவது குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.