உலகம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் வேளையில், செயற்கை நுண்ணறிவு வரவால் பணி இழப்புகள் நேரிடும் என்ற வாதம் எழுந்துள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. சர்வதேச மனிதவள நிறுவனமான சேலஞ்சர், கிரே அண்ட் கிறிஸ்துமஸ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மே மாதத்தில், செயற்கை நுண்ணறிவு காரணமாக மட்டுமே 4000 பேர் தங்கள் வேலையை இழந்துள்ளனர்.
“பல்வேறு துறைகள் சார்ந்து, இந்த வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், 417500 எண்ணிக்கையில் பணி இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பணி நீக்கம் ஆகும். பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக இந்த பணி நீக்கம் அமைந்துள்ளது. அதே வேளையில், குறிப்பிட்ட அளவில், செயற்கை நுண்ணறிவு வரவு இதன் காரணமாக அமைந்துள்ளது. மொத்த பணி நீக்கத்தில் 4.9% செயற்கை நுண்ணறிவு வரவால் ஏற்பட்டுள்ளது.” - இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














