நடுவானில் ஏர் பிரான்ஸ் விமானம் பறந்து கொண்டிருந்த பொழுது, இரு விமானிகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஜூன் மாதத்தில் ஜெனிவாவில் இருந்து பாரிஸ் சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில், விமானி மற்றும் துணை விமானி ஆகியோருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் மற்றொருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. விமானத்தை இயக்கும் காக்பிட் அறையில் இந்த சண்டை நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் பரபரப்பாயினர். விமானத்தில் இருந்த பிற ஊழியர்கள் இருவரையும் சமாதானப்படுத்தியதன் பிறகு, விமானம் பத்திரமாக பாரிசில் தரையிறக்கப்பட்டது. இது தொடர்பாக, பிரான்சின் விமான விசாரணை நிறுவனமான பிஇஏ அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதன் பின்னரே, இந்த மோதல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது, இரண்டு விமானிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஏர் பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மோதலுக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்தச் சம்பவம் உலக அளவில் பேசு பொருள் ஆகி உள்ளது.