டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகியவற்றில் இருந்து சுமார் 18000 கோடி கடன் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு, ஏற்கனவே இருக்கும் குறுகிய கால கடன்களுக்காக இந்த தொகை பெறப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த நிறுவனம், எதிர்காலத்தில், நீண்ட கால அடிப்படையில் கடன் பெற விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, பெறப்பட்டுள்ள கடன் முறைகள் அடிப்படையில் இந்த கடனும் பெறப்படும் என டாடா தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த ஒரு வருடத்திற்கு இந்த நடைமுறையை பின்பற்ற உள்ளதாகவும் டாடா கூறியுள்ளது. ஆனால், கடந்த முறையை விட தற்போது அதிக வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 4.25% வட்டிக்கு கடன் வாங்கப்பட்ட நிலையில், தற்போது 6.5% வட்டிக்கு கடன் பெறப்படுகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தில், விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் இணைப்பு மற்றும் நிறுவன மறுக்கட்டுமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்த கடன் தொகை இது தொடர்பாக முதலீடு செய்யப்படும் என்று கருதப்படுகிறது.