டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனம், ஏ320 நியோ, போயிங் 777 ரகங்களில், மேலும் 12 விமானங்களை குத்தகைக்கு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இவை 2023 ஆம் ஆண்டின் முதல் 6 மாத கால விமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 42 விமானங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்நிலையில், கூடுதலாக குத்தகைக்கு எடுக்கப்பட உள்ள 12 விமானங்களில், 6 விமானங்கள் அகலமான வடிவிலான போயிங் 777-300 ER ஆகவும், 6 விமானங்கள் குறுகிய வடிவிலான ஏர்பஸ் ஏ320 நியோ ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போயிங் 777-300 ER விமானத்தில், புதிதாக ப்ரீமியம் எகானமி வகுப்பு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து அதிகரிக்க படுவதுடன், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.