ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் சித்காரா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் கடந்த 23 ஆண்டுகளாக ஏர்டெல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏர்டெல் நிறுவனத்தில் மிக முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல், இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், "ஏர்டெல் நிறுவனம், உலகளாவிய வணிகம், உள்நாட்டு வணிகம், நெக்ஸ்ட்ரா டேட்டா சென்டர் ஆகிய 3 பிரிவுகளாக பிரிந்து செயல்பட உள்ளது. இந்த பிரிவுகளின் தலைவர்களாக, வாணி வெங்கடேஷ், கணேஷ் லட்சுமி நாராயணன், ஆஷிஷ் ஆரோரா ஆகியோர் முறையே நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் ஆகஸ்ட் 3 வது வாரம் வரை, அஜய் சித்காரா தனது பதவியில் நீடிப்பார். ஏர்டெல் நிறுவனத்தில் அவரது நீண்ட கால பங்களிப்புக்கு நன்றிகள். அவரது எதிர்கால திட்டத்திற்கு வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார். இந்த செய்தி வெளியான பின்னர், ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 0.5% சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.