ஆகாசா ஏர் விமான நிறுவனம், நிகழ்நிலையில், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றத் தகுந்த வகையில், புதிய பயண கட்டண முறையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்காக, ரேட் கெயின் என்ற நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, ரேட் கெயின் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி பானு சோப்ரா கூறுகையில், "செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் எங்கள் நிறுவனத்தின் ஏர் கெயின் அம்சம் ஆகாசா ஏர் நிறுவனத்திற்கு பெரிதும் துணை புரியும். இதன் செயல்பாடுகள் மூலம், ஆகாசா ஏர் நிறுவனத்தின் வருவாய் மற்றும் விலை நிர்ணயக் குழு, பயணக் கட்டணம் நிர்ணயிப்பதில் திறம்பட செயலாற்றும். இந்த அம்சத்தின் மூலம், நிகழ்நிலை சந்தை நிலவரத்தின் அடிப்படையில், பயணிகளுக்கு ஏற்ற, தகுந்த/குறைந்த விலையில் பயணக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். ஆகாசா ஏர் நிறுவனம் வளரும் பொழுது, எங்களது ஏர் கெயின் அம்சம், நிறுவனத்தின் வருவாயை பெரியளவில் பெருக்குவதற்கு துணை புரியும்" என்று கூறினார்.
ஆகாசா ஏர் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி பிரவீன் ஐயர், "ஏர் கெயின் அம்சத்தின் மூலமாக, நிகழ்நிலை சந்தை நிலவரம், பிற விமான நிறுவனங்களின் பயண கட்டணங்கள், போன்ற காரணிகளைக் கணக்கில் கொண்டு, விமான கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால், பயணிகளுக்கு தகுந்த கட்டணம் நிர்ணயிக்கப்படுவதோடு, ஆகாசா ஏர் நிறுவனத்திற்கு வருவாயும் ஈட்டப்படும்" என்று கூறினார்.