அனைத்து ஆய்வகங்களும் கரோனா பரிசோதனை விவரங்களை ஐசிஎம்ஆர் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று காணொலி மூலமாக கரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் தற்போது நிலவும் சுகாதார சூழல் குறித்த தகவல்களைக் கேட்டறிந்த ராஜேஷ் பூஷண், சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.
தமிழகத்தில் உள்ள 342 கரோனா பரிசோதனை ஆய்வகங்களும் இதற்கு முன்பு வரை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) இணையதளத்தில் தங்களது பரிசோதனை விவரங்களை தினமும் பதிவேற்றியது. கரோனா குறைந்தவுடன் சரிவர பதிவேற்றம் நடைபெறுவதில்லை. மீண்டும் அந்த விவரங்களை முறையாக பதிவு செய்ய ஆய்வகங்களை அறிவுறுத்துமாறு மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.