சூரிய குடும்பத்தில் உள்ள நெப்டியூன் கிரகம், தனது மேகங்களை எல்லாம் இழந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக, மேகங்கள் இன்றி நெப்டியூன் கிரகம் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி, இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 1994 முதல் 2022 ஆம் ஆண்டு வரை, நெப்டியூன் கிரகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். அதன்படி, நெப்டியூன் கிரகத்தில் காணப்படும் மேகங்கள் படிப்படியாக குறையத் தொடங்கி, தற்போது முற்றிலுமாக மறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு, நெப்டியூன் கிரகத்தின் தென் துருவப் பகுதியில் மட்டும் சிறிய அளவிலான மேகம் காணப்பட்டதாகவும், தற்போது அதுவும் மறைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், சூரியனின் 11 ஆண்டுகால சுழற்சி நடவடிக்கையும், நெப்டியூன் கிரகத்தின் மேகங்களும் நேரடி தொடர்புடையதாக உள்ளது என கண்டறிந்துள்ளனர். விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு, ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கிகள் எடுத்த புகைப்படங்கள் மிகவும் துணை புரிந்ததாக கூறப்பட்டுள்ளது.