அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளை ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டதைப் போலவே, அதன் மற்றொரு நிதி முறைக்கேட்டை ஃபோர்ப்ஸ் நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்கள் மூலம் ரஷ்ய வங்கியில் கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக ஃபோர்ப்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“வினோத் அதானியின் மறைமுக கட்டுப்பாட்டில் சிங்கப்பூரைச் சேர்ந்த ‘பினாக்கிள்’ முதலீட்டு நிறுவனம் இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு, ரஷ்யாவை சேர்ந்த விடிபி வங்கியில் இந்த நிறுவனம் மூலமாக வினோத் அதானி கடன் பெற்றுள்ளார். குறிப்பாக, இந்த கடனுக்கு ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரின் போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடனாகப் பெற்ற 263 மில்லியன் டாலர்களில் 258 மில்லியன் டாலர்களை, பெயரிடப்படாத பங்குகளுக்காக ‘பினாக்கிள்’ நிறுவனம் ஒதுக்கியுள்ளது. மேலும், இந்தக் கடனைப் பெறுவதற்கான உத்தரவாதமாக அஃப்ரோ ஏசியா மற்றும் வேர்ல்ட் வைட் ஆகிய இரு நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை இரண்டுமே அதானி குழுமத்தின் பங்குதாரர்களுக்கு சொந்தமானதாகும். இதன்மூலம், அதானி குழுமத்துக்கான பங்குகளை, பிற நிறுவனங்கள் மூலம் பெற்று, அதனை அதானி குழும பங்குகளில் முதலீடு செய்தது தெரியவந்துள்ளது” இவ்வாறு போர்ப்ஸ் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.