அமேசான் நிறுவனத்தின் கீழ் ஜூக்ஸ் (Zoox) என்ற பெயரில் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் வாகன நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கலிபோர்னியாவில் அமைந்துள்ள நிறுவன தலைமை இடத்தில், இந்த நிறுவனம் தயாரித்துள்ள ரோபோடாக்ஸி வாகனம் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ரோபோடாக்ஸியில் ஸ்டீயரிங், பெடல் போன்ற அம்சங்கள் எதுவும் கிடையாது. இதில் 4 பயணிகள் அமர்ந்து கொள்ளலாம். மேலும், இது முழுக்க முழுக்க தானியங்கி முறையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்களை பயணிகளாகக் கொண்டு, இந்த ஓட்டுனர் இல்லா வாகனம் சோதிக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில், இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. இது குறித்து பேசிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சா இவான்ஸ் “ஓட்டுனர் இல்லா வாகன உருவாக்கத்தில் இது முக்கிய மைல்கல். விரைவில் இந்த வாகனத்தை சந்தைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறினார். ரோபோடாக்ஸிக்கு போட்டியாக, ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு மற்றும் ஆல்பாபெட் ஆகிய நிறுவனங்கள் இதே போன்ற தொழில்நுட்பத்தில் வாகனங்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.