அதானி குழுமம், கடந்த வாரத்தில், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது. தொடர்ந்து, 20,000 கோடி ரூபாய் நிதியை அந்த நிறுவனத்திற்கு வழங்கியது. அதன் பின்னர், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10% உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 9.32% உயர்ந்து, 564.40 ரூபாய்க்கு வர்த்தகமானது. திங்கட்கிழமை வர்த்தக நாளின் போது, 572.25 ரூபாய் வரை ஒரு பங்கு வர்த்தகமானது இது, முந்தைய நாளின் பங்கு மதிப்பான 516.30 விட 10% கூடுதல் ஆகும் இதுவே, அம்புஜா சிமெண்ட்ஸ் வரலாற்றில் உச்சகட்ட பங்கு விலையாகும்.
கடந்த வாரத்தில், அதானி குழுமம், அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி நிறுவனங்களை கையகப்படுத்தியது. தற்போது, அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 63.15% பங்குகளும், ஏசிசி நிறுவனத்தின் 56.69% பங்குகளும் அதானி குழுமத்திற்குச் சொந்தமாகி உள்ளது. அதன் மூலம், சிமெண்ட் உற்பத்தியில், இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமாக அம்புஜா சிமெண்ட்ஸ் உருவாகியுள்ளது. சமீபத்தில், இது குறித்து பேசிய அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, அம்புஜா சிமெண்ட்ஸ், இந்தியாவின் லாபகரமான சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக மாறும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.