உலகின் முதல் கண் மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்டுள்ளது. கண் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நபருக்கு முழுமையான பார்வை கிடைக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே வேளையில், அவருக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவை சேர்ந்த ஆரோன் ஜேம்ஸ் என்பவருக்கு, உயர் அழுத்த மின்சாரம் தாக்கியது. இதில் அவரது முகத்தின் பெரும் பகுதி பாதிக்கப்பட்டது. இதனை சீர் செய்யும் விதமாக, அறுவை சிகிச்சை நிகழ்த்தப்பட்டது. அவர் முகத்தின் பாதி பகுதி, முழுமையாக வெளியில் இருந்து பொருத்தப்பட்டது. மொத்தம் 21 மணி நேரத்திற்கு இந்த அறுவை சிகிச்சை நிகழ்ந்தது. தற்போது, அவர் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முகத்தோடு சேர்த்து முழு கண்ணையும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்துவது உலகில் இதுவே முதல் முறை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.