அண்ணாநகர் கோபுர பூங்கா இன்று மாலை திறக்கப்படுகிறது.
சென்னை அண்ணாநகர் பூங்காவில் 135 அடி உயர கோபுரம் உள்ளது. காதல் தோல்வி அடைந்த ஒரு சில காதல் ஜோடிகள் இந்த கோபுரத்தின் மேலே ஏறிச்சென்று தற்கொலை செய்த சம்பவங்கள் நிகழ்ந்தது. இதனால், கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்த கோபுரத்தின் மேலே ஏறிச்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கோபுரம் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் சீரமைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவு பெற்றுள்ள நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த கோபுரம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ரூ.10 கட்டணம் நிர்ணயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கட்டண நிர்ணயம் குறித்த முன்மொழிவு மாநகராட்சியின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சியின் அனுமதி கிடைத்தவுடன் கட்டணம் வசூலிக்கப்படும். அதுவரையில் பொதுமக்களுக்கு இலவசமாகவே பார்வையிட அனுமதி வழங்கப்பட இருக்கிறது.