வட இந்தியா இன்னொரு குளிர் அலையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் இன்னொரு மோசமான குளிர் அலையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று வானிலை ஆய்வாளர் நவ்தீப் தஹியா கூறியுள்ளார். ஜனவரி 14-ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையில் வட இந்தியாவில் கடுமையான குளிர் அலை நிலவும். ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையில் இந்த குளிர் நிலை மிக மோசமான புதிய உச்சத்தைத் தொடும். அதாவது -4°c to +2°c என்றளவில் வெப்பநிலை இருக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.
21-ஆம் நூற்றாண்டு தொடங்கியதிலிருந்து 2023 ஜனவரி தான் மிகவும் குளிர்ந்த காலமாக இருக்கக் கூடும். இந்த வாரத் தொடக்கத்தில் டெல்லி சாஃப்டர்ஜங் பகுதியில் 1.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. தென் இந்தியாவிலும் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இதற்கு மூடுபனியும் காரணமாக இருக்கிறது என்றார்.