ஆப்பிள் நிறுவனத்திற்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு, லாபகரமான ஆண்டாக அமைந்துள்ளது. ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஷிப்மென்ட் 11% உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஐபோன் உற்பத்தி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5.5% உயர்ந்துள்ளது. மேலும், 2022ல், ஆப்பிள் நிறுவனம் தனது உள்நாட்டு உற்பத்தியை இந்தியாவில் அதிகரித்துள்ளது. எனவே, 2022 ஐ விட 2023 ஆம் ஆண்டில், ஆப்பிள் இந்தியாவின் வணிகம் மேலும் அதிகரிக்கும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில், ஆப்பிள் நிறுவனம் 2 மில்லியன் கைபேசிகளை ஷிப்மென்ட் செய்துள்ளது. இது மாதாந்திர அடிப்படையில் 18% அதிகமாகும். ஆனால், வருடாந்திர அடிப்படையில் 7% குறைவாகும். சைபர் மீடியா ரிசர்ச் நிறுவனம் அளித்துள்ள தகவல்கள் அடிப்படையில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், ஐபோன் 14 சீரிஸ் கைபேசிகள் வர்த்தகம் ஒட்டுமொத்த ஐபோன் வர்த்தகத்தில் 59% ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபோன் 13 வர்த்தகம் 32% ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.