டெல்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி மாநகராட்சியில் நியமன உறுப்பினர்கள் விஷயத்தில், ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மேயர் தேர்தல் அடுத்தடுத்து தள்ளிவைக்கப்பட்டது. அடுத்து வரும் வியாழக்கிழமை தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி துணைநிலை ஆளுநர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது துணைநிலை ஆளுநர் அலுவலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 17ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்றும், இந்த விஷயத்தில் அரசியலமைப்பு விதிகள் மிகவும் தெளிவாக உள்ளன என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.














