தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்திற்கு 4 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வி மேம்பாட்டுக்கான புதிய திட்டங்களை வகுப்பது, புதிய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை தொடங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்குவது, பேராசியர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை வழங்குவது என பல்வேறு பணிகளில் உயர்கல்வி மன்றம் செயல்பட்டு வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகப்படுத்தும் உயர்கல்வித் திட்டங்கள் மூலம் தமிழக அரசு நிதி உதவி பெறுவதிலும் இந்த மன்றத்தின் பங்களிப்பு முக்கியமானது. இந்த நிலையில், மன்றத்திற்கு நான்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்: தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி மையத்தின் உதவி பேராசிரியர் பன்னீர் செல்வம், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தலைவர் முரளிதரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர். இந்நிலையில், வீரமுத்துவேல், சந்திரயான் 3 திட்ட இயக்குனராக இருந்தபோது நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கி இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.