உலக வரலாற்றிலேயே அதிக வெப்பமான மாதமாக கடந்த ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வானிலை மையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
எல் நினோ விளைவு காரணமாக சர்வதேச அளவில் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட கூடுதல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. தற்போது உச்ச கட்டத்தை அடைந்திருக்கும் எந்த விளைவு, படிப்படியாக வலுவிழக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த விளைவு காரணமாக, கடந்த ஜூன் மாதம் முதலே ஒவ்வொரு மாதமும் வரலாற்றில் அதிக வெப்பமான மாதமாக பதிவாகி வருகிறது. அந்த வகையில், தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தை விட கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.58 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 12 மாதங்களில் பதிவான சராசரி வெப்பம் 1.6 டிகிரி செல்சியஸ் ஆகும். அதன்படி, பாரிஸ் ஒப்பந்தத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை கடந்த ஆண்டு தாண்டியுள்ளது. இது காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் முனைப்புடன் ஈடுபட வேண்டும் என்ற எச்சரிக்கையை ஏற்படுத்தி உள்ளது.