குறைவான கலோரி அளவு கொண்டுள்ளதால், செயற்கை இனிப்பூட்டிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், "உடல் எடையை கட்டுப்படுத்தவும், தொற்றா நோய்களின் பாதிப்புகளை குறைக்கவும் இவற்றைப் பயன்படுத்துவது முறையாக இருக்காது" என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், செயற்கை இனிப்பூட்டிகளில் எந்த வித ஊட்டச்சத்துக்களும் இல்லை என்று கூறியுள்ளது. எனவே, இவற்றின் பயன்பாட்டை பொதுமக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
சுக்கிரலோஸ், அஸ்பார்டின், சாக்கரின், ஸ்டிவியா போன்ற செயற்கை இனிப்பூட்டிகள் குளிர் பானங்கள் மற்றும் இதர உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை, உடல் எடையை குறைப்பதற்கு எந்த வித நீண்ட கால பயனையும் வழங்காது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீண்ட காலத்திற்கு செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துவதால், டைப் 2 டயாபடீஸ் வாய்ப்புகள் அதிகரிப்பதாக எச்சரித்துள்ளது. மேலும், இதன் விளைவாக, இதய நோய் ஏற்பட்டு, உயிரிழப்பு நேரலாம் எனவும் கூறியுள்ளது. ஆனால், சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு பாதிப்புகள் இல்லை என தெரிவித்துள்ளது.