தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையை தலைமை ஏற்று நடத்தினார். இன்று தமிழக சட்டப்பேரவையில் அவரது விசாரணை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், சசிகலா உட்பட 4 பேரை ஜெயலலிதா மரணத்தில் தொடர்புடையவர்களாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு. உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:
கடந்த 2016 செப்டம்பர் 22ஆம் தேதி, ஏற்கனவே 3 நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா, சுயநினைவின்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முன்னதாக, அவர் மருத்துவர் சிவகுமார் பரிந்துரையின் படி, paracetamol மாத்திரைகள் உட்கொண்டுள்ளார். அத்துடன், அவருக்கு கட்டுப்பாடற்ற நீரிழிவு, மாறுபட்ட ரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன், குடல் நோய் போன்ற பிரச்சனைகள் இருந்துள்ளன.
அதன்பின்னர், செப்டம்பர் 27ஆம் தேதி இரவு, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அக்டோபர் 11ஆம் தேதி அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரசல் ஆஞ்சியோ சிகிச்சை செய்ய பரிந்துரைத்துள்ளார். ஆனால், ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படவில்லை. மருத்துவ ரீதியில், அவரது உடல்நிலை அறுவை சிகிச்சைக்கு ஏற்ற நிலையில் இருந்த போதும், ஆன்ஜியோக்ராம் செய்யாததன் காரணம் கூறப்படவில்லை. இந்த சிகிச்சை மேற்கொள்ள படாததற்கு மருத்துவர்கள் ரிச்சர்ட் பிகே மற்றும் பாபு ஆபிரகாம் ஆகியோர் முரண்பட்ட தகவலை பதிவு செய்துள்ளனர். அத்துடன், முக்கியமாக, சசிகலா இந்த சிகிச்சையை தள்ளி வைப்பதில் முக்கிய பங்காற்றி உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சசிகலாவுடன் ஜெயலலிதாவுக்கு சுமூகமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது.
மருத்துவமனை அறிவிப்புகளின் படி, ஜெயலலிதா இறந்த நேரம், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11:30 மணி ஆகும். ஆனால், ஜெயலலிதாவின் மருமகன் தீபக், அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3:50 க்குள் அனுசரித்துள்ளார். இதில் முக்கிய முரண்பாடு உள்ளதை கவனிக்க வேண்டும்.
சசிகலா, மருத்துவர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். மாறுபட்ட தகவலை வழங்கிய மருத்துவர் பாபு ஆபிரகாம் மற்றும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தவறான செய்திகளை செய்தியாளர் சந்திப்பில் கூறிய அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி ஆகியோரும் விசாரிக்கப்பட வேண்டும். அத்துடன், தகவல்களை உடனுக்குடன் அரசுக்கு தெரிவிக்க தவறிய அப்போதைய தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, மக்கள் நல்வாழ்வு துறையிடம் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.