சர்வதேச அளவில் சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு கருவி அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கருவிக்கு போட்டியாக பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு கருவிகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில், க்யூ எக்ஸ் லேப் ஏஐ என்ற நிறுவனம், ஆஸ்க் க்யூ எக்ஸ் என்ற ஜெனரேடிவ் ஏஐ அசிஸ்டன்ட் கருவியை உருவாக்கி உள்ளது. இந்த கருவி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில், கிட்டத்தட்ட 100 மொழிகளில் சேவைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உட்பட 12 இந்திய மொழிகளும் இதில் அடங்கும்.
ஆஸ்க் க்யூ எக்ஸ் செயற்கை நுண்ணறிவு கருவியை கைப்பேசி செயலியாகவும், கணினி வலைத்தளம் வழியாகவும் பயன்படுத்த இயலும். பயனர்கள் விரும்பினால் சந்தா கட்டணம் செலுத்தி கூடுதல் சேவைகளை பெறலாம். கட்டணம் இல்லா சேவையில் அடிப்படை வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கிரியேட்டிவ், ஸ்டாண்டர்ட் மற்றும் ப்ரொபஷனல் ஆகிய 3 வகைகளில் சேவைகள் கொடுக்கப்படுகின்றன. எதிர்காலத்தில், புகைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோவை கொண்டு சேவைகளை பெறும் அம்சங்கள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.