இந்தியாவின் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 143612 கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாத இறுதியிலும் ஜிஎஸ்டி வருவாய் கணக்கிடப்படும். அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் 143612 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மூலம் வசூலாகி உள்ளது. மத்திய அரசு இது தொடர்பாக செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய ஜிஎஸ்டி வருவாய் 24710 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி வருவாய் 30951 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் 77782 கோடியாகவும் உள்ளது. அதில், இறக்குமதி பொருட்கள் மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 42067 கோடி ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 10168 கோடி ரூபாய் கூடுதல் செஸ் வரி வசூலாகி உள்ளது. அத்துடன், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யிலிருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு 29524 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டிக்கு 25119 கோடி ரூபாயும் மத்திய அரசு வழங்கியுள்ளது. எனவே, அதற்கு பின்னர், ஆகஸ்ட் மாத மத்திய ஜிஎஸ்டி வருவாய் 54234 கோடி ரூபாயாகவும், மாநில ஜிஎஸ்டி வருவாய் 56070 கோடி ரூபாயாகவும் உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 112020 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மூலம் வசூலான நிலையில், இந்த ஆண்டு 28% கூடுதல் வசூல் ஆகியுள்ளது. குறிப்பாக, இறக்குமதி மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாயில் 57% உயர்வும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாயில் 19% உயர்வு காணப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்த வருடம் 8386 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 19% கூடுதலாகும். புதுச்சேரியில் 200 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகி, 28% வருவாய் உயர்வு பதிவாகியுள்ளது.














