ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி படிக்க வரும் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணம் இரண்டு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ.59,300 ஆக இருந்த கட்டணம் ரூ.1,33,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது வெளிநாட்டு மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கைக்கு மாணவர் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா சர்வதேச மாணவர்களின் கவுன்சில் தலைவர் யேகணேஷ் சோல்தன் பவுர் இந்த கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இது சர்வதேச மாணவர்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும். இதனால் குறைந்த கட்டண நடைமுறைகள் உள்ள வேறு நாடுகளை மாணவர்கள் மாறக்கூடும் என்றார். இது குறித்து அந்நாட்டு கல்வி அமைச்சர் ஜேசன்ட் கிளியர் கூறுகையில், ஆஸ்திரேலியாவுக்கு சர்வதேச கல்வி மிகவும் முக்கியமான வருவாயாக உள்ளது. தரத்தையும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்துவது அவசியமாக உள்ளது. எனவே விசா கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாதது என்றார். ஆஸ்திரேலியாவில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. தற்போது 1,20,277 மாணவர்கள் அங்கு உயர் கல்வி பயில்கின்றனர்.














