ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில், கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி, 24 வயதுடைய பெண் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாக இந்தியரான ராஜ்வீந்தர் சிங் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் வசித்து வந்த அவர், பஞ்சாப் மாநிலத்தின் புத்தர் கலன் பகுதியை சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. இன்றைய தேதியில், 38 வயதாகும் அவரை பற்றிய தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு, ஆஸ்திரேலிய காவல்துறை, ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் சன்மானம் தருவதாக அறிவித்துள்ளது. இது அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 633000 டாலர்களுக்கு சமம் ஆகும்.
ராஜ்வீந்தர் சிங் இந்தியாவில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே, இது தொடர்பாக, புதுடெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் துறையின் உயர் அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய காவல்துறை அறிவித்துள்ள சன்மானம், இந்திய அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கூறப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய தகவல்களை நேரடியாக குயின்ஸ்லாந்து காவல்துறைக்கு தெரிவிக்கும் வண்ணம், வாட்ஸ்அப் எண் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜ்வீந்தர் சிங் குறித்த தகவல்களை தெரிவிக்க விரும்பும் இந்தியர்கள், +91 11 41220972 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த தோயா கோர்டிங்கலே, கடந்த 2018 ஆம் ஆண்டு, அக்டோபர் 21ஆம் தேதி, காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மறுநாள் காலையில் வாங்கேட்டி கடற்கரைப் பகுதியில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில், தற்போது, சோனியா ஸ்மித் என்ற அதிகாரி ஈடுபட்டுள்ளார். அவர், “தனிப்படை ஒன்று இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. தோயாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க இடையறாது உழைத்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஆஸ்திரேலியா மட்டும் இன்றி. வெளிநாட்டினரும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று கூறியுள்ளார்.