சீனாவை எதற்கும் விதமாக, ஆஸ்திரேலியா, ஏவுகணைத் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்காக, ஏவுகணைத் தயாரிப்பு நிறுவனங்களான Raytheon மற்றும் Lockheed ஆகியவற்றுடன் ஆஸ்திரேலியா அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டிலேயே ஏவுகணைத் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது. அத்துடன், நீண்ட தூர இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளின் மீது கவனம் செலுத்த உள்ளதாக கூறியுள்ளது.
இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ், "இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, சீனா, தனது ராணுவ பலத்தை பன்மடங்கு உயர்த்தி உள்ளது. சர்வதேச நாடுகளுக்கு வெளிப்படைத் தன்மை இல்லாத வகையில், பல முறைகளில் சீன ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இது, இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே, 2027 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டிருந்த உள்நாட்டு ஏவுகணை தயாரிப்பு, 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதற்காக 1.6 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட உள்ளது" என்று கூறியுள்ளார்.