இந்தியாவில் 25000 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக டாடா பவர் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சி அடைய உள்ள இந்தியாவின் மின்சார வாகனச் சந்தைக்கு பெரிதும் துணை நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நொய்டாவில் நடைபெற்று வரும் 2023 வாகன கண்காட்சியில் டாடா பவரின் மின்சார வாகன சார்ஜிங் இணைப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “டாடாவின் EZCharge என்ற செயலி மூலம் அருகில் உள்ள சார்ஜிங் நிலையங்களை அறிவது உள்ளிட்ட மின்சார வாகன சார்ஜிங் குறித்த பல தகவல்களை அறியலாம். இந்த துறையில், இதுவரை அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக இது அறியப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 3600 பொது சார்ஜிங் நிலையங்கள் மற்றும் 23500 க்கும் மேற்பட்ட, வீடுகளில் உபயோகிக்கும் தனிப்பட்ட சார்ஜர்கள், டாடா பவர் சார்பாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. டாடா பவர் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டுத் துறை தலைவர் வீரேந்திர கோயல், “இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மின்சார வாகனத்துறைக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். அதை நோக்கியே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது” என்று கூறினார்.