கடந்த நிதி ஆண்டில், இந்தியாவின் சில்லறை வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக வாகன டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வாகனங்களின் மொத்த சில்லறை விற்பனை 22150222 என்ற எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டை விட 21% உயர்வாகும். குறிப்பாக, பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை 23% உயர்ந்து, 3620039 என்ற எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள் விற்பனையை பொறுத்தவரை, 19% உயர்வு பதிவாகி, 15995968 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதே வேளையில், சரக்கு வாகனங்களின் சில்லறை விற்பனை 33% உயர்வையும், மூன்று சக்கர வாகன விற்பனை 84% உயர்வையும் பதிவு செய்துள்ளன. மேலும், டிராக்டர்களின் சில்லறை விற்பனை 8% உயர்வை பதிவு செய்துள்ளது. கொரோனா பொதுமுடக்க சூழலுக்குப் பிறகு, வாகன விற்பனை உயர்ந்துள்ளது குறித்து டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் மணிஷ் ராஜ் சிங்கானியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.