பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சென்னையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் அவரது வீட்டின் முன்பு கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 11 பேரையும் ஐந்து நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி அனுமதி வழங்கியது. இதனை அடுத்து அவர்களிடம் தனித்தனியாக குழுவாகவும் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பொன்னை பாலு மற்றும் திருவேங்கடம் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போலீசார் பிடியில் இருந்து திருவேங்கடம் தப்பிக்க முற்பட்டபோது சென்னையில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.