தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் அர்ச்சகர் சீதாராமன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூர் உட்பட சில கோயில்களில் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக புகைப்படம் எடுக்க தடை உள்ளது. சில கோயில்களில் சிலைகள் திருட்டு சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே, கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவின் விசாரணையின் போது அரசு தரப்பில், நவ. 14 முதல் பக்தர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் 15 இடங்களில் செல்போனுக்கு தடை உள்ளது என்று கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், திருச்செந்தூர் கோயிலில் அமலாகியுள்ள உத்தரவை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அமல்படுத்தி கோயில்களின் புனிதத்தையும், தூய்மையையும் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.