ஆந்திராவில் உள்ள சாலைகளில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்த கந்துகூரில் கடந்த மாதம் 28-ந் தேதி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த சந்திரபாபு நாயுடு நெல்லூரிலிருந்து பொதுக்கூட்டம் நடந்த கந்துகூர் வரை உள்ள 11 கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் ரோடு ஷோ நடத்தினார். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இதையடுத்து ஆந்திர மாநில முதன்மைச் செயலாளர் ஹரிஷ் குமார் குப்தா நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலைகளில் பேரணி மற்றும் சாலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்தார். தேசிய நெடுஞ்சாலைகளில் பேரணி நடத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பொது சாலைகளில் கூட்டங்கள் அனுமதிப்பதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். அரிதான மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான அனுமதியை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து பரிசீலிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.














