வங்காளதேசத்தில் தேர்தலை நடத்த முடிவு செய்ததும் எனது தாயார் ஷேக் ஹசீனா வங்காளதேசம் திரும்புவார் மகன் சஜித் தகவல் அளித்தார்.
வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்ததால் அங்கு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சகாபுதீன் உத்தரவிட்டதை அடுத்து அங்கு தற்போது இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு சட்டப்படி வங்காள தேசத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாட்டை வழிநடத்தும்.
இந்நிலையில், வங்காளதேசத்தின் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஹசீனாவின் மகன் சஜித் வசத் ஜோய் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இப்பொழுது ஏற்பட்டுள்ள புதிய அரசு தேர்தலை நடத்த முடிவு செய்ததும் எனது தாயார் ஷேக் ஹசீனா வங்காளதேசம் திரும்புவார். அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்து எனக்கு தெளிவாக தெரியவில்லை. தற்போது அவர் இந்தியாவில் உள்ளார். எனக்கு அரசியல் விருப்பம் கிடையாது. கட்சிக்காக செயல்படுகிறேன். வங்காளதேசத்தில் பாகிஸ்தான் உளவுத்துறை தான் அமைதியின்மையை தூண்டுகிறது. கடந்த இரண்டு நாட்களாக எங்கள் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுப்போம் என்றார்.