வங்காளதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா வீட்டு காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை அந்நாட்டு அதிபர் முகமது சகாபுதீன் பிறப்பித்தார். அதோடு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் அவர் விடுதலை செய்துள்ளார். வங்காளதேச தேசியவாத கட்சியின் தலைவர் பேகம் கலிதா ஜியா அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார். அவருக்கு நீரிழிவு, இருதய பாதிப்புகள் போன்ற பல்வேறு நோய்கள் உள்ளன. பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் விலகி இருந்து வருகிறார்.
இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு அவருக்கு 17 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக வீட்டு காவலில் இருக்கிறார். இந்நிலையில் அவரை அதிபர் சகாபுதீன் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.














