வங்காள தேசத்தில் போராட்டம் காரணமாக பல்வேறு நகரங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
வங்காள தேசத்தில் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீட்டு முறை பாரபட்சமாக உள்ளது என்று கூறி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ஆளும் கட்சியின் மாணவர் பிரிவு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இதில் 6 பேர் பலியாகினர்.
இந்த போராட்டம் பிற பகுதிகளிலும் நடந்து வருகிறது. டாக்காவில் உள்ள பி டிவி தொலைக்காட்சியின் தலைமையகத்துக்கு வெளியே காவல்துறைக்கும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்பொழுது அலுவலகத்தின் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதே போன்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை நடந்த போராட்டங்களில் ஒட்டுமொத்தமாக பலி எண்ணிக்கை 32 ஆக உள்ளது. இந்த போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள மெட்ரோ நிலையங்கள் சேவையை நிறுத்தியுள்ளன. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர எல்லை பாதுகாப்பு படையினர் முயற்சி செய்கின்றனர். இந்நிலையில் வங்காளதேசத்தில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.














