இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக, கிட்டத்தட்ட 30 வோஸ்ட்ரோ கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 18 உலக நாடுகளில் இந்த கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக துறை நிர்வாகி சந்தோஷ் குமார் சாரங்கி தெரிவித்துள்ளார். மேலும், இந்த கணக்குகளில் வர்த்தகம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதத்தில், மத்திய ரிசர்வ் வங்கி, சர்வதேச வணிகத்தை இந்திய ரூபாய் நாணயத்தில் மேற்கொள்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டது. அதன் பின்னர், ரஷ்யாவை சேர்ந்த Sberbank மற்றும் VTB Bank ஆகியவை இந்திய ரூபாய் வர்த்தகத்தை செயல்படுத்தின. அதனைத் தொடர்ந்து, Gazprom என்ற மற்றொரு ரஷ்ய வங்கி, யூகோ பேங்க் வழியாக ரூபாய் வர்த்தகத்தை ஏற்படுத்தியது. தற்போதைய நிலையில், யூகோ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பல வங்கிகள், வோஸ்ட்ரோ கணக்குகள் மூலம் ரூபாய் வர்த்தகத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளன. இதன் மூலம், இந்திய ரூபாயிலான சர்வதேச வர்த்தகம் அதிகரிக்கப்பட்டு, டாலர் வர்த்தகம் குறையும். எனவே, இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.